சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த லோகமான்ய திலக் விரைவு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டையே உலுக்கிய ஒடிஷா கோரமண்டல் ரயில் விபத்திற்கு பிறகு பல இடங்களில் ரயில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்குச் சென்ற லோகமான்ய திலகர் அதிவிரைவு ரயில் புறப்பட்டு சென்றது.அப்போது பேசின் பிரிட்ஜ் அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ரயில் எஞ்சினுக்கும் முதல் ரயில் பெட்டிக்கும் இடையே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட பயணிகள் பீதியடைந்தனர்.ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ரயிலில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.மேலும் இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், “சென்னையில் இருந்து மும்பை சென்ற லோகமான்ய திலக் ரயிலில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை; HOG (ஹெட் ஆன் ஜெனரேஷன்) கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை மட்டும் வெளியேறியது. தண்ணீர் உள்ளே நுழைந்ததால் HOG கப்ளரில் இருந்து புகை வந்தது.
புகை வருவதை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை சரியான நேர்த்தில் அறிந்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்தைத் தவிர்க்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ அணைக்கப்பட்டதும் ரயிலில் மாற்று எஞ்சின் இணைக்கப்பட்டு ரயில் மீண்டும் மும்பை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றது எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.