டெல்லியில், உள்ள முகர்ஜி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் 12.30 மணியளவில் கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் அதிச்சியடைந்த நிலையில், அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மாடியில் இருந்து கயிறு மூலம் ஜன்னல் வழியாக மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்தனர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், 11 வாகனங்களில் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், மாணவர்கள் ஜன்னல் வழியாக கீழே இறங்குவதற்கும் உதவி செய்தனர். பயிற்சி மையத்தில் திடீரென இந்த விபத்தில் சிக்கிய சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து மாணவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், பயிற்சி மையம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் மின்சார மீட்டரில் தீ விபத்து ஏற்பட்டதுடன், மின் உபகரணங்களில் இருந்து புகை வெளியேறியதால் மாணவர்கள் பீதியடைந்து, பயிற்சி மையத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழே இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.