கொடைக்கானல் வனசரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் கட்டுக்கடங்காமல் 500 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் பற்றி எரியும் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மச்சூர் பகுதியில், தோகை வரை என்னும் இடத்தில் பற்றி எரிந்த தீ இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் மயிலாடும் பாறை என்னும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வருகிறது.
இதனால் அரிய வகை மூலிகை செடிகளும், விலை உயர்ந்த மரங்களும் எரிந்து சாம்பலாகின, மேலும் அரிய வகை பறவை இனங்களும்,வன விலங்குகளும் இடம் பெயரும் சூழ்நிலையும் தற்போது உருவாகியுள்ளது.

தற்போது எரிந்து வரும் காட்டு தீ மலை பகுதிகளின் மேல் பற்றி எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காட்டு தீ அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்கு தீ தடுப்பு எல்லைகள் அமைக்கப்படும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மேலும் தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ பரவி வருவதால் கொடைக்கானல் மச்சூர் மலை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிகிறது.