ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அனைத்து மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும் வரை காலைவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களின் இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது :
ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் . தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இந்தியா-இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என கூறியுள்ளார்.