துபாயைத் தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் ( kenya rain ) இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் நீர்த் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளன.
கென்யாவில் மார்ச் மாத இறுதி முதலே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் பெய்த கனமழை தீவிரமடைந்த நிலையில், கென்யாவே வெள்ளக்காடாக மாறியது. மேலும் ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவிலான பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாகக் கென்யாவின் முக்கிய இடங்களில் உணவுப் பாதுகாப்பு சவால்கள் ஏற்படலாம் என அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தொடர்ந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Also Read : ஹைதராபாத்தை சுற்றி வரும் 4 லட்சம் தெரு நாய்கள் – மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி..!!!
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகப் பேரிடர் குழுவினர் கூறியுள்ளனர். மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுமார் 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மழை, வெள்ளத்தால் கென்யாவின் தலைநகரான நைரோபி அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைரோபியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வீடுகளை இழந்தவர்கள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகழ்ந்தவர்கள் என அனைவரையும் பேரிடர் குழுவினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்
நாட்டின் சில பகுதிகளில் இன்னும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது கென்யா வானிலை ஆய்வு மையம். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கென்யா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.