ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களா நீங்கள்? – இதை செய்ய மறக்காதீங்க..!

ஆடம்பர பொருட்கள் முதல் குண்டூசி வரை ஆன்லைனில் வாங்கும் நிலைக்கும் பெரும்பாலான மக்கள் வந்துவிட்டனர்.

இந்த பழக்கம், வெளியில் செல்ல இயலாதவர்களுக்கு, நேரம் கிடைக்காதவர்களுக்கு, வெளியில் செல்ல முடியாதவர்களுக்கு உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஆனால், அது சில சமயங்களில் பாகற்காயாக கசந்து விடுவதுண்டு.

உதாரணமாக, ஃபிலிப்கார்ட் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் ரூ.51,999 விலையுள்ள ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு இரண்டு நிர்மா சோப்பு கட்டிகள் வந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

மிக விலையுயர்ந்த ஐஃபோனை வாங்கிய மகிழ்ச்சியில், அது வீட்டுக்கு வரும் நாளை எதிர்பார்த்திருந்தார். அந்த நாளும் வந்தது. ஆனால், ஆனந்தத்தை விட அது கடும் அதிர்ச்சி காத்திருப்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங், ஃபிலிப்கார்ட் மூலமாக ஆர்டர் செய்த ஐஃபோன் வந்ததும், அதனைக் கொண்டு வந்த நபரிடம், பெட்டியை பிரிக்குமாறு கூறி, விடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பெட்டியைப் பிரிக்கும் போது அதில் ஐஃபோனுக்குப் பதிலாக இரண்டு சோப்புக் கட்டிகள் இருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பொருளை பெற்றதற்கான OTP-யை, பகிர்ந்து கொள்ள மறுத்த சிம்ரன்பால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தார். இந்த விடியோவை தனது யூடியூப் சானலிலும் பதிவேற்றினார்.

நல்ல வேளையாக, அவர் அதிக விலை மதிப்புள்ள லேப்டாப், செல்லிடப்பேசி போன்ற பொருளை வாங்கும் போது பயன்படுத்தும் ‘பொருளை திறந்து பார்த்து வாங்கும்’ வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தார். அதாவது, ஃபிளிப்கார்ட்டில் அதிக விலை கொண்ட பொருளை ஆன்லைனில் வாங்கி, அது வீட்டுக்கு வரும் போது, அதனைக் கொண்டு வருபவரே பிரித்துக் காட்ட வேண்டும். அந்த பொருள் ஏற்புடையதாக இருந்தால் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வேளை, தாங்கள் ஆர்டர் செய்த பொருள் அதில் இல்லை என்றால், அந்த பெட்டியை திறக்கும் போது எடுக்கும் விடியோ அல்லது புகைப்படத்தை ஆன்லைன் நிறுவனங்கள் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்கின்றன.

அதேவேளையில், வாங்கிய பொருள் சரியாக இல்லையென்றால், மாற்றியோ, பணத்தையோ கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாம் தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் புகார் அளிக்கலாம்.

தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் புகார் அளிப்பது எப்படி?

நுகர்வோர் தங்களது புகார்களை 1800 – 11 – 4000 அல்லது 14404 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.

அல்லது 8130009809 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

அதே வேளையில், அதற்கான என்ற இணையப் பக்கத்திலும் உங்கள் புகார்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், என்சிஎச் , கன்சியூமர் , உமங் போன்ற செல்லிடப்பேசி செயலிகளை பதிவிறக்கம் செய்து, அதிலும் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் பொருள்களை வாங்கும் போது இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்:

எப்போதும் நம்பிக்கைக்கு உரிய, சிறந்த வாடிக்கையாளர் சேவையைக் கொண்டிருக்கும் ஆன்லைன் தளங்களில் பொருள்களை வாங்குங்கள்.

எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், விற்பனையாளர் பெற்றிருக்கும் நட்சத்திர ரேங்குகள்(Star Ratings) மற்றும் பொருளை ஏற்கனவே வாங்கியவர்கள் பதிவிட்ட விமரிசனங்களையும்(Reviews and Comments) படியுங்கள்.

ஃபிலிப்கார்ட் அல்லது அமேசானில் பொருள்களை வாங்கும் போது, ஃபிலிப்கார்ட் அஷ்யூர்ட் அல்லது அமேசான் ஃபுல்ஃபில்டு போன்றவற்றின் வாயிலாக வாங்குங்கள்.

தாங்கள் வழங்கும் பொருள்களை பரிசோதித்து வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் அல்லது மோசடி நடக்க வாய்ப்புக் குறைவு. நமக்கு வந்த பெட்டி ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தால் அதனை வாங்க வேண்டாம்.

விலை மதிப்புள்ள பொருள்களை வாங்கும் போது, அதனைக் கொண்டு வருபவரே பிரிக்கச் செய்து விடியோ எடுக்கலாம். அல்லது பிரிக்கும் போது விடியோ எடுத்து வைத்துக் கொள்ளலாம். இது நீதிமன்றம் வரை செல்ல உதவுகிறது.

Total
0
Shares
Related Posts