நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி புலி, இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 4 மனிதர்களையும் கொன்றுள்ளது. இந்த புலியை பிடிக்க 12-ஆவது நாளாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மசினகுடி – சிங்காரா சாலையில் 30 மீட்டர் இடைவெளியில், ஒவ்வொரு மரத்திலும் 2 வேட்டை தடுப்பு காவலர்கள் மரத்தின் மீது அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன், புலி பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றிலும் மரத்தின் மீது பரண் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மோப்பநாய்கள், டிரோன், கும்கி யானைகள் ஆகியவற்றின் உதவியுடன் வனத்துறையினர் புலி இருக்கும் இடத்தை கண்டறிய முயன்று வருகின்றனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு, புலியை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு வனத்துறை மருத்துவகுழு மற்றும் 50-க்கு மேற்பட்ட வனத்துறையினர் சிங்காரா மற்றும் மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று புலியின் கால்தடத்தை சத்தியமங்கலம் மோப்பநாய் டைகர் கண்டறிந்த நிலையில் மாலை நேரம் என்பதால், அதை பின்தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இன்று சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பது தடயங்கள் மூலம் கண்டறியப்பட்டது. அந்த புலி மூங்கில் காட்டில் பதுங்கி இருப்பதால் அதை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கவச உடை அணிந்த வனத்துறை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் அடர் வனப்பகுதிக்குள் விரைந்தனர். மேலும் ட்ரோன் கேமரா மூலமும் வனப்பகுதியை கண்காணிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 40 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் அவ்வப்போது வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிங்காரா வனப்பகுதியில் மூங்கில்கள் அதிகளவு இருப்பதால் அவற்றுக்குள் ஆட்கொல்லி புலி பதுங்கி கொள்கின்றது. இதனால் அந்த புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பதில் வனத்துறைக்கு சிரமங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஒரு புதர் பகுதியில் இருந்து மற்றொரு புதர் பகுதிக்கு அந்த புலி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கே, மாடுகள் மற்றும் கன்றுகளை மரங்களில் கட்டிவைத்துள்ள வனத்துறையினர், புலி வெளியே வந்தால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தயார் நிலையில் இருக்கின்றனர். அத்துடன், அந்தப் பகுதியில் பரண் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ்;“புலியை பிடிப்பதற்கான முயற்சிகள் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மூன்று மூன்று பேராக நான்கு குழுக்கள் அமைத்து, 10 இடங்களில் காலை 6 மணி முதல் கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், குறிப்பாக 4 இடங்களில் பரண் அமைத்து , கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருவதாகவும், நான்கு இரவுகளாக புலியின் வருகை கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் கூறினார்.
குறிப்பாக, புலியை பிடித்து ஆய்வு செய்வதற்கு மிக அனுபவம் வாய்ந்த 6 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், புலியை பிடித்தவுடன் எதற்காக மனிதர்களை தாக்குகிறது என்ற ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் T23 புலிக்கு வயது ஆகி விட்டதால் புலிக்கு தொல்லை கொடுக்காமல் பிடிக்க அறிவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என கூறினார்.