கர்நாடகாவின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா (yediyurappa) சென்ற ஹெலிகாப்டர், பலத்த காற்றின் காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, கலபுர்கி அருகே அவரது ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட இருந்தது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட இருந்தபோது, வீசிய பலத்த காற்றால் இறங்குதளம் அருகே இருந்த பிளாஸ்டிக் பைகள் போன்ற குப்பைகள் திடீரென பறந்ததால் அங்கு திடீரென தெளிவற்ற சூழல் காணப்பட்டது.
இதனால், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டர் சற்று நேரம் வானில் பறந்தபடியே இருந்தது. இதனையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களையும் குப்பைகளையும் அகற்ற ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதி தூய்மைப்படுத்தப்பட்ட பின் அதே இடத்தில் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
மேலும், விமானி சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதை ரத்து செய்து விட்டதாகவும், இல்லையெனில், ஏதேனும் அசம்பாவிதம் கூட ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா (yediyurappa) சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.