உத்திரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல ரவுடியுமான (gangster) ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் மர்ம நபர்களால் காவல்துறையினர் முன்பே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால், கடந்த 2005 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை மர்ம நபர்கள் கடந்த 2007ம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, பிரயாக்ராஜ் நீதிமன்றம் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான (gangster) ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பாக உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆதிக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற காவல் துறையினருக்கும், எதிர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் ஆதிக், அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.