காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற இந்திய கேங்ஸ்டர் அமைப்பு தாங்கள் தான் சுட்டுக் கொன்றதாக பொறுப்பேற்றுள்ளது.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா – கனடா இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளது. நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது.
இந்நிலையில், கனடாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்கும் பணியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங்கின் உதவியாளர் சுக்தூல் சிங், இன்று கொல்லப்பட்டார். இரு கும்பல்களுக்கு இடையேயான மோதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுக்தூல் சிங் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், சுக்தூல் சிங் கொல்லப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என இந்தியாவை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கேங்கஸ்டர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு..
“சுகா டுனுகே என அழைக்கப்படும் சுக்தூல் சிங், குர்லால் பிரார் மற்றும் விக்கி மிட்கேரா ஆகியோரின் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளது. சுக்தூல் சிங் பலரின் வாழ்க்கையை அழித்ததாகவும், இறுதியில் அவர் அவரது பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார்” என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.