தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
உலக நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என திரிபடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதோடு, கொரோனா தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ள நிலையில், இந்தியாவிலும் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மட்டும் 27 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.