கடந்த ஆண்டில் மட்டும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை (sundar pichai), 1,854 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றுள்ளார் என்ற தகவல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பிரபல தேடுதளமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai), பதவி வகித்து வருகிறார்.
முன்னதாக, சமீபத்தில் ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் 1,854 கோடி ரூபாய் என்பதும், அதன்படி அவர் ஒவ்வொரு மாதம் சராசரியாக 154 கோடி ரூபாய் ஊதியமாக பெற்ற தகவலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சுந்தர் பிச்சையின் ஊதியம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகம் எனவும், அதே போல் தனது ஊதியத்தில் 1,788 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாகவும் சுந்தர் பிச்சை பெற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கூகுள் நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததற்காக இந்த தொகையானது சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதிச்சுமையை குறைப்பதற்காக கூகுள் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த சூழலில், சுந்தர் பிச்சைக்கு இந்த பெருந்தொகை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.