நாடு முழுவதும் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில், காலியாக இருக்கும் “போஸ்ட் மாஸ்டர்” (post master recruitment) மற்றும் “துணை போஸ்ட் மாஸ்டர்” பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டு உள்ளது.
மேலும், இதன் மூலம் 40,889 காலியிடங்கள் (post master recruitment) நிரப்பப்பட உள்ளன என்றும், தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி இடங்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் மேலும், 10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 எனவும், ஆனால் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அளவிலும் சிறந்து விளங்கி வருவதால், தற்போது சமமான மதிப்பெண் பெற்றிருக்கும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.