ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் 2021 – 2022-ம் ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் 3859 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் 52 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீடுகள் கட்ட பெருந்திறல் அளவீடு பணிகள் நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு அளவீடு பணிகளை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: “பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.1.20 லட்சம் மற்றும் மாநில அரசின் கூடுதல் நிதியாக ரூ.50 ஆயிரம் என ஆக மொத்தம் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 269 சதுர அடியில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீடுகளை பயனாளிகள் கட்டிக்கொள்ள வேண்டும். இதற்காக அடித்தளம், தரைதளம், கூரை மட்டம் மற்றும் பணி நிறைவு பெற்றவுடன் என 4 கட்டமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நிதி செலுத்தப்படும்.
வீடு கட்ட பயனாளிகளுக்கு 104 மூட்டை சிமென்ட் குறைந்த விலையில் வழங்கப்படும். இதில், அரசு மூலம் வழங்கப்படும் சிமெண்ட் ரூ.216 விலையிலும், டான்செம் அரசு நிறுவனத்தின் சிமெண்ட் ரூ.325 விலையிலும் பயனாளிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், வீடுகள் கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளலாம். இவற்றுக்காக ரூ.24 ஆயிரத்து 570 நிதி வழங்கப்படும்.
அதேபோன்று, ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்ட நிதி வழங்கப்பட உள்ளது. இந்த வீடுகளை பயனாளிகள் ஒரு வருடத்திற்குள் கட்டி முடித்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை விரைவாக தொடங்கி பணிகள் தரமாகவும் வேகமாக முடிக்க வேண்டும்” என அவர் கூறினார்.