சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லோக்சபாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டானிஷ் அலி வலியுறுத்தியுள்ளார்.
2019-ம் ஆண்டு மத்திய அரசு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வரும் சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்.
ஆனால் இந்த நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் மட்டும் இந்திய குடியுரிமை பெற முடியாது என்கிற பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லி ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
இத்தகைய போராட்டங்களுக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரிகள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் கொரோனா பரவல் அதிகரித்ததாலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதாலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டன.
இந்த நிலையில் அண்மையில் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார். இதே பாணியில் சி.ஏ.ஏ.வையும் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
லோக்சபாவில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. டானிஷ் அலி இது தொடர்பாக பேசினார். அவர் பேசுகையில், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. UAPA எனப்படும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை பிரதமர் மோடி திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதிவழியில் போராடிய பொதுமக்கள் மீது தவறாக சட்டங்கள் பாய்ந்துள்ளன என்றார்.
ஏற்கனவே நாகாலாந்தில் 14 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ராணுவம் படுகொலை செய்த விவகாரத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வடகிழக்கு மாநிலங்களில் வலுத்துள்ளது.
நாகாலாந்து அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயுதப் படை சட்டத்துக்கு எதிராக மேகாலயா முதல்வரும் குரல் கொடுத்துள்ளார். மணிப்பூர் மாநில அமைச்சரவையும் இதேபோல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.