கைனகோமாஸ்டியா (Gynecomastia) என்பது உடலில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகும். இதை ஒரு நோய் என கூற முடியும் கூற முடியாது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
ஆண்களுக்கு மார்பு பகுதி பெண்களை போல் வீக்கமாக இருப்பதைத்தான் கைனகோமாஸ்டியா என்று கூறுகிறோம். இந்த மாற்றமானது ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. இதில், நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையில், காம்புகள் மட்டும் வீக்கமாக காணப்படும். இரண்டாவது நிலையில், காம்புகளுக்கு கீழ் வீக்கம் காணப்படும். மூன்றாவது நிலையில், பெண்களைப் போன்று மார்பகம் பெரிதாக இருக்கும். நான்காவது நிலையில், மார்பக தொய்வோடு மார்பகம் பெரிதாக இருக்கும்.
இதுபோன்று பாதிக்கப்படும் ஆண்கள், வயதானவர்களாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனை குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், பதின்ம வயதில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது இது குறித்து இளைஞர்கள் கவலைப்படுகின்றனர்.
உடற்பயிற்சி செய்தால் கைனகோமாஸ்டியா சரிசெய்ய முடியும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், உடற்பயிற்சி செய்வது மூலம் கொழுப்பை மட்டுமே குறைக்க முடியுமே தவிர, மார்பில் உருவாகும் சுரப்பியை சரி செய்ய முடியாது என்றும், உடற்பயிற்சி மூலம் கைனகோமாஸ்டியாவை சரி செய்ய முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கைனகோமாஸ்டியா (Gynecomastia) நிலைக்கு உள்ளாகும் ஆண்கள் திருநங்கைகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் வாய்ப்பு இருப்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கைனகோமாஸ்டியாவால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு தாடி மீசை எல்லாம் இயல்பாகவே வளர்ந்திருக்கும் என்றும் ஆனால், பெண்ணிற்குரிய நிலை எதுவும் அவர்களிடம் காணப்படாது என்றும், அத்தகையோருக்கு ஹார்மோன் பரிசோதனை செய்வது அவசியமற்றது என்றும் கூறுகின்றனர். மார்பு பகுதியில் ஏற்படும் சுரப்பி மாற்றமே இதற்கு காரணமே தவிர, பெண்மை தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்பட தேவையில்லை என்றும், இது உடலில் ஏற்படும் சாதாரண மாற்றமே என்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்வது மூலம் இதனை சரி செய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.