தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
நேற்று முன்தினம் (28-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (29-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 30ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.
இதனால், தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.