தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,
இன்று, (20.11.2023) திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (21.11.2023) திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதன் கிழமை (22.11.2023) தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வியாழக்கிழமை (23.11.2023) நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (24.11.2023) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (25.11.2023 – 26.11.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.