சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், தற்போது ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் நேற்றும், இன்றும் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கன மழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 11 மணி வரை நீடித்தது.
இதனால், எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், மெரினா, மயிலாப்பூர், மந்தைவெளி, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருகி உள்ளது. இந்நிலையில், சென்னையில் எந்த நிலைமையையும் சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு கமாண்டோ படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், டி.எஸ்.பி தலைமையில் 56 கமாண்டோ படையினர் அனைத்து மீட்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். உயிர் காக்கும் சாதனங்கள், மிதவை வாகனங்கள் மற்றும் பிற வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
இதையடுத்து, நேற்று இரவு திரு.வி.க நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். அதேபோல், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெரம்பூர் , கொளத்தூர் தொகுதியில் சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீரை ஆய்வு மேற்கொண்டார்.
இன்று காலை 9.30 மணி அளவில் ராயபுரம் மண்டலம் யானை கவுனி மேம்பாலம் அருகில் கல்யாணபுரம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். இந்த நிலையில், தற்போது ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோரிடம் நிலைமையை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.