கன்னியாகுமரியில் நேற்று பிற்பகலில் இருந்து மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழை 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை, தாமிரபரணி ஆறு, பரளியாறு போன்றவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணக்காலையில் இருந்து படந்தாலுமூடு செல்லும் அதங்கோடு சாலையில் வெள்ளம் புகுந்துள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஈசாந்திமங்கலம் அருகே உள்ள நங்காண்டி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த 18 குடும்பங்களை மீட்புத் துறையினர் மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
தோவாளை தாலுகாவில் 8 இடங்களிலும், கல்குளம் தாலுகாவில் 2 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 17 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 113 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 366 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செண்பகராமன்புதூர் அருகே உள்ள கட்டளை குளம், பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு நாடான் குளம் மற்றும் தோவாளை தாலுகாவில் உள்ள 2 குளங்கள் என மொத்தம் 4 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழை 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஏற்கனவே கன மழை பெய்து குமரி மாவட்டமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கும் நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.