சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்பதால் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் சென்னை சென்ட்ரல், அண்ணா நகர், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, சைதாப்பேட்டை, மைலாபூர், திநகர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா சாலை, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இந்த திடீர் கனமழை காரணமாக மழை நீர் சாலைகளில் தேங்கியது. இதனால், நேற்று மாலை முதல் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரமாக மக்கள் அவதிப்பட்டனர். இதனை அடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்பதால் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், நேற்று எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.