இந்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளா மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.
மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .
மேலும் மலை கிராமங்களில் மழையால் மண்சரிவு ஏற்படலாம் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 7 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமிட்டு உள்ளனர்.
கேரளாவில் நேற்று பெய்த கனமழையின்போது மாநிலம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டியில் கால்வாயில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் இறந்தார். முப்பத்தடத்தில் ஆதித்தியன்(17) என்ற இளைஞனர் குளத்தில் மூழ்கி இறந்தார்.
தேவிக்குளம் பகுதிகளில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 8 மாத குழந்தை உள்பட 2 பேர் இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரளாவில் பலத்த மழை பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 99 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.