தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் நல்ல மழையுமாக வானிலை காணப்பட்டு வருகிறது. கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் இரவில் கனமழையாக தீவிரமடைந்தது.
திண்டுக்கல்லில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. அதன்பின்பு மழையின் தீவிரம் குறைந்து சாரல் மழையாக பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இதேபோல், கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் நாளை கோவை, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.