தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு இடைவிடாமல் தொடர்ந்து 12 மணி நேரம் மழை பெய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 6684.10 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாநகரின் முக்கிய சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தூத்துக்குடி மாநகர பகுதிகளான அம்பேத்கார் நகர், சண்முகபுரம், இனிகோ நகர், லயன்ஸ் டவுன் , சிதம்பரம் நகர், ரஹமத் நகர், வி எம் எஸ் நகர், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் இருந்து மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் தகவல் படி தகவல் படி, அதன்படி தூத்துக்குடி: 361.40 மி.மீ, ஸ்ரீவைகுண்டம்: 618 மி.மீ, திருச்செந்தூர்: 679 மி.மீ, காயல்பட்டணம்: 932 மிமீ குலசேகரபட்டணம்: 326 மிமீ, சாத்தான்குளம்: 466 மி.மீ, கோவில்பட்டி: 495 மி.மீ, கயத்தார்: 263 மி.மீ, கழுகுமலை: 124 மி.மீ, கடம்பூர்: 348 மி.மீ, எட்டயபுரம்: 159.70 மி.மீ, விளாத்திகுளம்: 238 மி.மீ, காடல்குடி: 110 மி.மீ, வைப்பார்: 202 மி.மீ, சூரங்குடி: 155 மி.மீ, ஓட்டப்பிடாரம்: 356 மி.மீ, மணியாச்சி 240 மிமீ, வேடநத்தம்: 267 மி.மீ கீழ அரசடி 344 மிமீ என மொத்தம்: 6684.10 மிமீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 351.79 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடம்பூர் கயத்தார் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பாற்று ஓடை பகுதியில் காட்றாற்று வெள்ளம் ஏற்பட்டு கோரம்பளம் குளம் முழுவதும் நிரம்பி உபரி நீர் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி பகுதியில் மிக கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழியுள்ளதால் இன்று காலை தூத்துக்குடிக்கு வரவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் பெரும்பான்மையானவை நிறுத்தப்பட்டுள்ளன. அரசுப்பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கனமழையால் தென் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய (காலை 10:00 மணி) தகவல் படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கோ, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.