தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுமுறை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெர்வித்துள்ளது.
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29-ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 30-ம் தேதி புதிதாக உருவாக இருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 29ஆம் தேதி உருவாக உள்ளநிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும், வரும் 28, 29 ஆம் தேதிகளில் கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.