இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோட்டார் வாகன சட்டம் 1989-ன் கீழ் உள்ள 138 விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லும் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இருசக்கர மோட்டார் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என்றும் , குழந்தைகள் பயணிப்பதால், இருசக்கர வாகனத்தை அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் இத்தகைய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும். இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 1 வருடம் கழித்து அமலுக்கு வரும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.