‘வீட்டைக் கட்டிப் பார். கல்யாண பண்ணிப் பாருன்னு’ முன்னோர்கள் சொல்லி வச்சது , ரெண்டுமே செஞ்சு முடிக்கிறது ரொம்ப கஷ்டம்கிரத முன்கூட்டியே தெரியப்படுத்ததான்.
பெரியவங்க பேசிமுடிச்சி முறைப்படி திருமணம் நடக்கிறது அவ்வளவு எளிதான காரியமில்ல. அதனாலதான் திருமண வயதை தாண்டியும், திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர்க் கன்னிகள் ஏராளம் பேர் இருக்காங்க…..
அதுக்கு காரணம்….
‘காலமெல்லாம் கஷ்டமில்லாம கஞ்சி ஊத்துவான்னு வேலையில இருக்கிற மாப்பிள்ளையா தேடுறாங்க…
ஆனா.. மாப்பிள்ளைவீட்டார் கேட்கிற வரதட்சணையை கொடுக்க வசதியில்ல…
சரி.. ஏழைக்கேத்த எள்ளுருண்டையா பார்த்தாங்கன்னா… ஜாதக பொருத்தம் இல்லைன்னு ஜோதிடர்கள் முட்டுக்கட்டை போட்டுடுறாங்க…
சொந்த சாதி சனத்திலேயும் மாப்பிள்ளை இல்ல..
- இந்த பிரச்னைகள் எல்லாத்தையும் கடந்து, கல்யாணத்தை முடிச்சி, ‘அப்பாடான்னு’ நிம்மதி பெருமூச்சி விடுறதுக்குள்ள, புகுந்த வீட்டுப் பிரச்னையால பொண்ணு ‘வாழாவெட்டி’ என்ற பட்டத்தோட திரும்பி வர்றா..
அல்லது திரும்பி வராத இடத்துக்குப் புருஷன் போனதால அமங்கலியா வர்றா..
இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு ?
ஆண்டவன் ஒவ்வொரு கோயில்லேயும், ஒவ்வொரு பிரச்னை தீர, வழிகாட்டியிருக்கான்.
வாங்க போவோம்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் வீற்றுள்ள ஸ்ரீ மங்களநாயகி சமேத ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோயிலுக்கு.
சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்திருத்தலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் இந்த அம்பாள் கையில், எப்போதும் மாங்கல்ய கயிறு இருக்கும்.அவளை நம்பிக்கையோடு வந்து வழிபடுவோர்க்கு அந்த தாலிக்கயிறைதான் பிரசாதமா தர்றாங்க.
திருமணம் ஆகாதவர்கள் பெற்றுக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
திருமணம் ஆனவர்கள் பெற்றுக் கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நீடித்து நிலைத்து,தீர்க்க சுமங்கலியாய் வாழ வழி கிடைக்கும் .
என்ன ஆச்சர்யமா இருக்கா..அதுக்கு இத்தலத்து சுவாமி, அம்பாளுக்கு பெயர் வந்த காரணத்தை தெரிஞ்சிக்கிட்டாலே, எல்லாம் புரிஞ்சு போயிடும்.
“பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல், மக்கள் வரிப் பணத்தை எடுத்து, தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலய திருப்பணிக்கு
செலவிட்டார். இதையறிந்த மன்னன் சினம்கொண்டு அமைச்சரைக் கைது செய்து அழைத்துவர உத்தரவிட்டான். அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். அவர் இறக்கும் தருவாயில், தனது மனைவியிடம் “நான் இறந்தவுடன், என்னை ஆட்கொண்ட ஈசன் வீற்றிருக்கும் இவ்வாறானலேயே
என் உடலை அடக்கம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே அவரின் இறந்த உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி மங்களாம்பிகையிடம், ‘மீண்டும் தனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளும்படி’ கதறி அழுது பிரார்த்தனை செய்தாள். தனக்கு கோயில் எழுப்பிய அத்தம்பதிக்கு அம்பாள் அனுக்கிரகம் செய்தாள். ஊர் எல்லை அருகே இறுதி ஊர்வலம் வந்ததும், அமைச்சரின் உயிரற்ற உடலுக்கு ஈசனின் அருளால் மீண்டும் உயிர்ப் பெறச் செய்தாள். அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் சவப்படுக்கையிலிருந்து எழுந்து, சிவாலயம் சென்று, “எனக்குப் பிராணனைக் கொடுத்த பிராணநாதா” என்று நன்றிப்பெருக்குடன் அழைத்து வழிபட்டார்.
அன்று முதல் இத்தலத்து ஈசன், ஸ்ரீ ‘பிராணநாதேஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார்.
அப்போது,அமைச்சரின் மனைவி மங்களாம்பிகையிடம், “இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என்போன்ற பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டாள்.
அமைச்சர் மனைவியிடம் பறிக்கப்பட்ட மாங்கல்யத்தை, இந்த அம்பாள் மீண்டும் கொடுத்ததால், இத்தல அம்பிகை ‘மாங்கல்யம் கொடுத்த ஸ்ரீ மங்களாம்பிகை’ என்று போற்றப்படுகிறாள்.
இதனால் மாங்கல்ய தோஷத்தை நீக்கி, சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.
“தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.அப்போது சுவாமிக்கு நிவேதனம் செய்து ,வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர்ச் சாதத்தை சாப்பிட்டால், எல்லாவித தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளும் நீங்கும்.
அகத்தியர் வழிபட்ட, அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு, 11 அமாவாசை தினத்தில், அபிஷேகம் செய்து வணங்கினால், பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தியாகும்.
இத்தலத்திலுள்ள நடராஜர் சந்நதியில் மரகதலிங்கம் உள்ளது. தினமும் உச்சி காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் நடைபெறுகிறது. அப்போது வாழைப்பழம், வெற்றிலை பாக்கு,
நிவேத்தியம் செய்து, வலம்புரிசங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகத் தீர்த்தத்தை பருகினால், உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் நிவர்த்தியாகும்
மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்யதோஷம், களத்திரதோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாகப் பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிவாள். தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக அருளும் இந்த அம்பிகையின் பாதத்தில், தாங்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை வைத்தும் பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்கிறது.
நவராத்திரி விழாவின்போது, அம்பாளுக்கு வஸ்திரம், ஆபரணங்கள் இல்லாமல் சந்தனகாப்பு மட்டுமே செய்யப்படுகிறது. அப்போது சந்தனத்திலேயே சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண்கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அம்பிகையை சந்தனகாப்பு அலங்காரத்திலேயே தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்து வழிபடலாம். அதனால் ஏராளமான நற்பலன்களை அடையலாம்” என்கிறார்
சுவாமிநாத சிவாச்சாரியார்.
மாங்கல்ய பலம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீ மங்களநாயகி வீற்றுள்ள திருமங்கலக்குடி ஆலயத்தை, வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கலாம் அல்லவா…