ஐ தமிழ் நேயர்கர்களுக்கு வணக்கம்..
ஸ்ரீ திரிநேத்ர தஜபுஜ வீர ஆஞ்சநேயர் …..அதாவது, மூன்று கண்கள்….பத்து கரங்கள்… அத்தனையிலும் தெய்வங்கள் அருளிய ஆயுதங்கள்….முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகள்… இப்படியோர் ஆஞ்சநேயர் திருமேனியை உலகில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும் ! இராமாயண காவியத்தோடு தொடர்புடைய இரண்டு தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒன்று சுசீந்திரம். மற்றொன்று இத்தலம்தான் ! என்ன நேயர்களே..ஆச்சரியமாக இருக்கிறதா … வாருங்கள் செல்வோம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ,மருதமும், நெய்தலும் மயங்கி நிற்கும், இயற்கை எழில் சூழ்ந்த ஊர்.. அனந்தமங்கலம்.
இவ்வூரின் நான்கு வீதிகளின் நடுவே அமைந்துள்ளது அருள்மிகு இராஜகோபாலப்பெருமாள் திருக்கோயில். இத்தலத்தில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வாசுதேவ பெருமாளும்,உற்சவர் ஸ்ரீ இராஜகோபாலப் பெருமாளும், தம் தேவிமார்களுடன் எழுந்தருளியுள்ளனர்.
முக மண்டபத்தில் தெற்கு நோக்கி விமானத்துடன் கூடிய தனி சந்நதியில், ஸ்ரீ திரிநேத்ர தஜபுஜ வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். உலகப் பிரசித்திபெற்ற, இந்த அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில், ஐ தமிழ்த் தாய் பேரானந்தம் கொள்கிறது. “இலங்கையில் யுத்தம் செய்து, சீதையைச் சிறை மீட்ட பின்பு, இராமன் ,சீதை, இலட்சுமணன், அனுமன் ஆகியோர் அயோத்திக்கு திரும்பாmaல் வழியில், பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இளைப்பாறி, விருந்துண்டனர்.
அப்போது மகரிஷி, இராமபிரானை வாழ்த்தியதோடு,”இராவணன் அழிந்த பின்னரும், அரக்கர் சிலர் ஆங்காங்கே பதுங்கி இருக்கவே செய்கின்றனர். அவர்களில், இரக்தபிந்து, இரக்த ராட்சகன் ஆகிய இருவரும் மிகக் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியின் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவம் நிறைவடையுமானால், அவர்களும் இராவணன் போல வரமும், உரமும் பெற்று உலகை அழித்து விடுவார்கள்.
ஆதலால், உலக நன்மைக்காக அவர்களையும் நீ அழிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். “மகரிஷியே ..தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு வாக்கு கொடுத்தபடி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். இலட்சுமணனnum என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்றல் உடைய மாவீரன் ஆஞ்சநேயனை அனுப்புவோம்”என்றார். அதனை அனைவரும் ஆமோதித்தனர். ஆஞ்சநேயரும் பணிவோடு ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க : அட்ட வீரட்டான தலங்களில் ஒன்றான திருப்பறியலூர் வீரட்டேசுரர் கோயில்!
ஆஞ்சநேயர் முன்னேரே…, அழியா வரம் பெற்றவர். அளவில்லா ஆற்றலும் உடையவர். அட்டமா சித்திகளும் கற்றவர். என்றாலும், கண்ணுக்குத் தெரியாத மாயாவிகளான அரக்கர்களை வெல்ல வேண்டும் என்பதால், திருமால் தன் சங்கையும் சக்கரத்தையும் அனுமனுக்கு அளித்தார்.
பிரம்மா கபாலத்தை வழங்கினார். ருத்ரன் மழு,சாட்டை, நவநீதம் தந்தார். இராமபிரான் வில்லையும் அம்பையும் அளித்தார். இந்திரன் வஜ்ராயத்தை வழங்கினான்.பார்வதி சூலத்தை கொடுத்தாள். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கிய ஆஞ்சநேயர், பத்து கரங்களுடன் காட்சி தந்தார்.
அப்போது கருடாழ்வார் தமது இரு சிறகுகளையும் அவருக்கு வழங்கினார். கடைசியாக அங்கு வந்த சிவபெருமான், தமது சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் அதாவது திரி நேத்ரம் ..மூன்று கண்கள், தஜபுஜம்….பத்து கைகள் கொண்டு வீர ஆஞ்சநேயராக அங்கிருந்து புறப்பட்டு, கடலில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த, அரக்கர்கள் இருவரையும் சம்ஹாரம் செய்தார்.
வெற்றி வாகைச் சூடிய பின்னர் ,அங்கிருந்து புறப்பட்டு இராமனை சந்திக்க வந்தார்.வரும் வழியில், கடற்கரை ஓரத்தில், இயற்கை அழகு நிரம்பிய ஓரிடத்திற்கு வந்ததும், அவருக்கு ஆனந்தம் மிகுந்தது.
அந்த இடத்தில் இறங்கி சற்று நேரம் ஆனந்தமாக தங்கி இருந்தார். அந்த இடமே ஆனந்தமங்கலம் ஆயிற்று. அதுவே தற்போது திரிந்து ‘அனந்தமங்கலம் ‘என்றழைக்கப்படுகிறது என்கிறது” தல வரலாறு. தஞ்சை அருகே மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலப் பெருமாள் திருக்கோயிலை முதலாம் குலோத்துங்கச் சோழன் எழுப்பியுள்ளான் அங்கு மூலவராக ஸ்ரீதேவி ,பூதேவி, உடனாகிய வாசுதேவப் பெருமாளே எழுந்தருளியுள்ளார். தாயார் நாமம் செங்கமலவல்லி.
அதைப்போலவே இங்கும், அதே பெயர்களில் சுவாமிகளும், சந்நதிகளும்,கோயிலும் அமைக்கப்பட்டுருப்பது சிறப்பு. இத்தலத்து ஆஞ்சநேயரை வழிபட்டால், திருமால், சிவபெருமான், பிரம்மா, ஸ்ரீராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவராகிய அனுமனை வழிபட்டால் ,நீண்ட ஆயுளை பெறலாம். அறிவு கூர்மையாகும். உடல் வலிமையாகும். மன உறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும்.
மனதில் தெளிவு உண்டாகும். வாக்கு வளமாகும். இது நித்ய வாசஸ்தலம் என்பதால் இந்த ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் வழிபடலாம் என்றாலும்,, மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று வழிபடுவது பாக்கியமாகக் கருதப்படுகிறது.
மாதந்தோறும் அமாவாசை மற்றும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் பெரும் திரளான பக்தர்கள் தரிசித்து வாழ்வில் வளம் பெறுகிறார்கள்.
இதுவரை ஐ தமிழ்த் தாய் மூலம் அனந்தமங்கலம் ஆஞ்சநேயரைத் தரிசித்த நீங்கள், வாய்ப்பு கிடைக்கும்போது நேரிலும் வழிபட்டு மகிலாமே! மீண்டும் ஓர் அற்புத தலத்தில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !