மொபைல் கைபேசிகளின் வரவுக்கு பிறகுதான் கண்ணுக்குத்தெரியாத அலை வரிசைகளை சாதாரன மனிதனும் பயன்படுத்தும் நிலை வந்த்து. அதற்கு முன்பு வரை வானொலி, தொலைக்காட்சி, எஃப்.எம். என நுன்னலை நுட்பத்தை பயன்படுத்தி வந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாக அதிர்வெண்ணை பிரித்துக் கொடுத்தது மொபைல் போன்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகே சாத்தியமானது.
அப்போது, ஒரு மொபைல் போனில் இருந்து குறிப்பிட்ட தரவுகளை வேறொரு மொபைக்கு அனுப்புவதற்கு இன்ஃப்ரா ரெட் (Infra Red ) எனும் அகச்சிவப்பு கதிர்களே பயன்படுத்தப் பட்டன. அன்றைய காலகட்டத்தில் அந்த இரண்டு மொபைல் டிவைஸ்களையும் அருகருகே வைத்தால் மட்டுமே ஒரு மொபைலில் இருந்து மற்றோரு மொபைலுக்கு தரவுகள் சென்றடையும்.
புகைப்படங்களைப் போல அதிக மெகா பைட் கொண்ட தரவுகளை இப்போது இருந்த அகச்சிவப்பு தொழில்நுட்பம் மூலம் உடனடியாக அனுப்புவதும் முடியாத காரியம்.
அதன் பிறகு, புளூ டூத் தொழில் நுட்பம் வளர்ந்த பின் தரவுகளை பெறுவதும் அனுப்புவதும் எளிதாக இருந்தாலும், வைஃபை தொழில் நுட்பம் வந்த பிறகே தற்போதுள்ள அளவிற்கு டேட்டா டிராஸ்ஃபர் அதிவேகம் எடுத்தது. இன்டர்நெட் ஸ்பீடும் பல மடங்கு அதிகரித்தது. இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடே ஒளி மூலம் தரவுகளை கடத்துவதாகும்.
அதன் மூலம், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வயர்லெஸ் தகவல்தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டு இருந்தாலும், அதையெல்லாம் பீட் செய்து அடுத்த கட்ட வேகத்தை நோக்கி நம்மை நகர்த்த தயாராகி விட்ட்து லைஃபை தொழில்நுட்பம். அதிக அலைவரிசை, எளிதாக இயக்க முடிதல், அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்பு போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது இந்த லை-ஃபை. மிக அதிக அலைவரிசையை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதால் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வீட்டு எலக்ட்ரிகல் சாமான்களை இயக்குவது போல கார் முதல் பைக் வரை, அவைகளின் ஹெட் லைட் வெளிச்சம் முதல் ஈரப்பதம் வரை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
அது என்னங்க லைஃபை டெக்னாலஜி?
லைட் ஃபிடிலிட்டி டெக்னாலஜி வைஃபை தொழில்நுட்பத்தைப் போலவே உள்ளது. இது எதிர்கால வயர்லெஸ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்றும் குறிப்பிடலாம். இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய கூறுகளே அதிவேக வயர்லெஸ் இணைப்பு மற்றும் நெட்வொர்க் அமைப்பே ஆகும்.
ஆனால், வை-ஃபை போலவே செயல்படும் இதில் ஒளியைப் பயன்படுத்தி தரவுகள் அனுப்பப்படுவதால் வை-ஃபையை விட லைஃபையின் வரம்பு 100 மடங்கு அதிகம் என்பதுதான் இதன் சிறப்பு
எப்படி இயங்கும் இந்த லை-ஃபை?
இந்த அமைப்பிலும், பிற அமைப்புகளைப் போலவே டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் ஆகியவை இருக்கும் டிரான்ஸ்மிட்டர் பிரிவில் உள்ள இன்புட் சிக்னலை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாற்றியமைத்து, எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி 0 மற்றும் 1 வடிவத்தில் தரவை அனுப்பலாம்.
எல்இடி பல்புகள் 0 மற்றும் 1 எனக் குறிக்கப்பட்ட சமன்பாட்டில் உள்ளன. ரிசீவர் பக்கத்தில், எல்இடி ஃப்ளாஷ்களின் வலிமையைப் பிடிக்கவும் வெளியீட்டை வழங்கவும் ஃபோட்டோ டையோட் (Photo Diode) பயன்படுத்தப்படுகிறது.
டிரான்ஸ்மிட்டர் பிரிவில், உள்ளீடு, டைமர் சர்க்யூட் மற்றும் எல்இடி பல்ப் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. உள்ளீடானது உரை அல்லது குரல் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.
டைமர் சர்க்யூட் ஒவ்வொரு பிட்டிலும் தேவையான நேர இடைவெளிகளை வழங்கும் மற்றும் அவை எல்இடி ஃப்ளாஷ் வடிவத்தில் ரிசீவர் பக்கத்திற்கு மாற்றப்படும்.
ரிசீவர் பக்கத்தில், ஃபோட்டோ டையோட் மற்றும் பெருக்கியும் உள்ளன. இங்குள்ள ஃபோட்டோடியோட் LED ஃப்ளாஷ்களைப் பெறும், பின்னர் அவற்றை மின் சமிக்ஞைகளாக மாற்றும். கடைசியாக, பெருக்கியானது ஃபோட்டோ டையோடில் இருந்து சிக்னல்களைப் பெற்று அவற்றை பெருக்கி அதாவது மல்டிபிளை செய்து வெளிப்படுத்தும். சுருக்கமாக சொல்லப் போனால் லை-ஃபை தொழில்நுட்பம் என்பது இதுதான்.
கொஞ்சம் தெளிவாக சொல்ல வேண்டுமானால், தரவு பரிமாற்றம் மற்றும் வேகத்தை 224 GB/sec வரை அதிகரிக்க இது வழக்கமான LED களை மட்டுமே பயன்படுத்துகிறது. அதாவது, வெளிச்சத்தைப் பயன்படுத்தி தரவு பரிமாற்றம் நடைபெறுகிறது. எளிதாக ஸ்விட்ச் ஆன் மற்றும் ஆஃப் எல்இடி அம்சம் பைனரி குறியீடுகள் வடிவில் தரவு பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது, இருப்பினும், அவை மிக வேகமாக இருப்பதால், மனிதக் கண்ணால் இந்த மாற்றத்தை அடையாளம் காண முடியாது. எனவே, பல்ப் நிலையானதாகத் தோன்றுகிறது.
LiFi இன் நன்மைகள்
• இதன் வேகம் மிக அதிகமாக இருப்பதால், தடங்கள் இன்றி hd வீடியோக்களைப் பார்க்க முடியும்.
• பகிர்வுகள் மூலம் LiFi இயங்காததால் இது மிகவும் பாதுகாப்பான அமைப்பாகும்.
• LiFi என்பது ஆபத்து இல்லாத தொழில்நுட்பம் என நம்பப்படுகிறது.
தற்போது கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் ஒரு சில பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த லை-ஃபை தொழில் நுட்பமானது விரைவில் இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாதன பயன்பாட்டிற்கும் வரும் எனக் கூறப்படுவதால், அப்போது வரவர “இந்த 5 G ரொம்ப ஸ்லோவா இருக்கே..!” எனக் கூறும் நிலை கட்டாயம் வரலாம்.