எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என உதயநிதி(minister udhayanidhi) தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 2019ம் ஆண்டு எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்து விட்டதாகக் கூறியது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், 5 வருடங்கள் கழித்து மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது குறித்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?
எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என உதயநிதி தெரிவித்துள்ளார்.