திமுக விசிக இடையே சுமூகமாக தான் செல்கிறது என விசிகவை சார்ந்த முன்னணி அரசியல் தலைவர்கள் ஊடகத்திடம் விவாதித்தாலும், நடக்கின்ற சம்பவங்களை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று சரியில்லையே என்ற மனநிலைக்கே மக்களை தள்ளுகிறது அரசியல் களநிலவரம்.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்க சென்றிரந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை வந்தபோது, விசிக மாநாடு குறித்து ’இது பொதுப்பிரச்னை, அரசியல் கூட்டணிகளுக்கு இதில் சம்மந்தமில்லை’ என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை என்று நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
சமீபகால சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி ஆளும் திமுக கட்சியை எதிர்த்து விமர்சனம் வைப்பதில் அழுத்தமாக உள்ளது விசிக. குறிப்பாக சொல்வதென்றால் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதானவர்கள் மீது சந்தேகத்தை கிளப்பியது, மதுக்கடையை திறந்து வைத்துள்ள அரசே பத்து இலட்சம் இழப்பீடு கொடுப்பது ஏற்புடையதல்ல என்று சொன்னது, ஒரு தலித் மாநிலத்தின் முதலமைச்சராக முடியாது என பேசியது, மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு அறிவிப்பு என அனைத்துமே திமுக அரசை நோக்கிய விமர்சனங்கள் மட்டுமே என விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
விசிக வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அதிமுகவுக்கு அவ்வபோது மனநிறைவை கொடுக்கும் விதமாக விசிக – திமுக முரண்பாட்டு சம்பவங்கள் நடந்தாலும், நாங்கள் திமுகவை தான் ஆதரிப்போம் என திருமா தரப்பு பிடிவாதமாக உள்ளது. ஆனாலும் இனி வரும் காலத்திலும் அப்படி இருக்குமா என்ற கேள்வியை கிளப்பியுள்ளது தற்போது நடந்திருக்கும் சம்பவம்.
திருமாவின் எக்ஸ் தளத்தில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என ஏற்கனவே தான் பேசிய வீடியோவை, ஆட்சியில் பங்கு’ என்ற கேப்ஷனோடு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டு நீக்கியிருப்பது புதிய விவாதத்துக்கு வழி வகுத்துள்ளது.
அண்மையில் பேசிய இந்த வீடியோவை, சமூக வலைத்தளப் பக்கத்தில் இன்று காலை 8.43 மணிக்கு பதிவிடப்பட்டு, மீண்டும் சுமார் 11 மணியளவில் அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த வீடியோவை பதிவிட்டார்? இதன் மூலம் யாருக்கு என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் மீண்டும் பதிவிட்டு நீக்குவதற்கு என்ன காரணம்? என தெரியாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் குழப்பம் அடைந்து வருவதோடு, இது கூட்டணி முறிவுக்கான அச்சாரம் தான் என சில சீனியர் பத்திரிகையாளர்களும் பேசத்தொடங்கி விட்டனர். இந்நிலையில், வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. அட்மின் பதிவிட்டிருக்கலாம் என்று திருமாவளவன் தெரிவித்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும் விசிக – திமுக இடையேயான பிரச்சனைகள் மீது எண்ணெய் ஊற்றும் விதமாக தற்போது கொடிகம்பம் அகற்ற நிகழ்வும் சூட்டை கிளப்பியுள்ளது. எந்த கொடிகம்பம் அகற்றம்? என கேட்குமளவுக்கு கூட்டணி ஆட்சியில் விசிக கம்பங்கள் அகற்றப்பட்டாலும் தற்போது அடிமடியில் கைவைத்து பார்த்திருக்கிறது காவல்துறை.
மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுவதற்காக நேற்று இரவு திடீரென 62 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பத்தை நடுவதாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் கீழ் மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் நேற்று இரவு காவல்துறையினர் கொடி கம்பத்தை அகற்றியுள்ளனர். இக்கொடிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமென்றால், விசிக தொடங்கிய அன்று திருமாவளவன் ஏற்றிவைத்த முதல் கம்பமாம். ஏற்கனவே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கட்சி தொடங்கியபோது முதன்முதலில் ஏற்றப்பட்ட விசிக கொடி கம்பம் உள்ள நிலையில், புதிதாக அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இந்த கொடி கம்பம் அகற்றப்பட்டதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசிகவினர் தெரிவித்தபோது, ஏற்கனவே நடப்பட்டுள்ள கொடியை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணிகளுக்காக அகற்றுவதற்கான பணி நடைபெறுவதால் அருகில் விசிக தலைவரை வைத்து கொடி ஏற்றுவதற்கு திட்டமிட்டதாகவும் அதனை காவல்துறையினர் தடுத்து கொடி கம்பத்தை எடுத்துசென்றதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக தொடர் நிகழ்வுகள் மூலம் விசிக – திமுக இடையே பனிப்போர் நடந்துவருகிறது.