’அதிமுகவை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம்’ என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் கடுமையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக-வில் பதவிச்சண்டை முற்றியுள்ளது. நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுக்குழு தொடங்கிய முதலே, ஜெயக்குமார், வளர்மதி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசினர். ஆனால் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை கூட அவர்கள் உச்சரிக்கவில்லை.
பிறகு, பொதுக்குழுவில் நிறைவேற்றபடவிருந்த 23 தீர்மானங்களையும், பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாக சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி ஆவேசமாக கத்தினார். பிறகு கே.பி முனுசாமியும் பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை நிராகரித்துவிட்டதாகவும் அவர்கள் கேட்கும் ஒரே தீர்மானம் ஒற்றைத் தலைமை தான் எனவும் பேசினார்.
இதனையடுத்து அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேறுமாறு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர் கோஷங்களை எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில், ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோ அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
வெளியேறும்போது வைத்திலிங்கம் சட்டத்திற்கு புறமான கூட்டம் இது என மைக்கில் பேசிவிட்டு கோஷமிட்டவாரு வெளியே சென்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்கினர். ஓபிஎஸ் வந்த பிரச்சார வாகனமும் பஞ்சராக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில், கனத்த மனதோடு வெளியேறினார் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தியவருக்கா இந்த நிலைமை? என பொதுமக்கள் மத்தியில் ஒருவித அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜெசிடி பிரபாகர் பேசியபோது;
”மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதமாக்கப்பட்டதுதொண்டர்கள் ஓ.பன்னீர்செலவம் பக்கமும், நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும் உள்ளனர் ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான்; செயல்திட்டத்தில் இல்லாததை பேச அனுமதித்ததே தவறு” ”அதிமுகவை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம்; அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன்” என தெரிவித்தார்.