மகன் படிப்பிற்காக தன் உயிரை துச்சமென நினைத்து தாய் பேருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் உள்ள மறைமலை அடிகள் தெருவில் வசித்து வந்த 46 வயதாகும் பாப்பாத்தி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி காலை, 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பேருந்து மோதிய விபத்தில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிடி கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது, சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்தில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடிச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென குறுக்கே வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் எழுந்து 2வதாக வந்த பேருந்தின் முன்பு ஓடிச்சென்று, விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனால், பாப்பாத்தி திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனே, ஓடி பேருந்து முன்பு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்த நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது உருக்கமான தகவல் வெளியானது. பாபத்தியின் மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45 ஆயிரம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால், அந்த பணத்தை பாப்பாத்தியால் கட்ட முடியாத சூழ்நிலையால் அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், யாரும் அவருக்கு பணம் கொடுத்து உதவவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மகன் படிப்பிற்கு என்ன செய்வது என்று மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டு உள்ளார். அப்போது யாரோ ஒரு சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும் என்றும், இல்லையென்றால் கருணை அடிப்படையில் உயிரிழந்தவரின் வேலை மகனுக்கு கிடைக்கும் எனவும் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தனது மகனுக்கு எப்படியாவது கல்லூரி கட்டணத்தை செலுத்தி விட வேண்டும் என்று நினைத்த பாப்பாத்தி ஓடும் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன் மகனை படிக்க வைக்க தன் உயிரை துச்சமென நினைத்து தாய் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.