புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினர் (cybercrime police) பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை அறிவிப்பில், “பழைய புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் சில செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பண மோசடி நடைபெறுவதாகவும்”, இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பண மோசடி நடைபெறும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களின் பெயர்களையும் தெரிவித்துள்ளனர்.
அவை, OLX, Facebook, Instagram, Second Hand Mall, Koove, ListUp, Tradly, Quikr, Zefo, MaxDeal, EBaySpoyl, Tips To Sell Used Things Online போன்றவற்றில் தான் இந்த இணைய வழி மோசடிக்காரர்கள் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் தங்களை ராணுவ வீரர்கள், CRPF அல்லது மத்திய அரசில் பணிபுரிகிறேன் என்று கூறி, தற்போது தனக்கு பணி மாறுதல் வந்து விட்டதால், நான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும் எனவும், இதனால் மேற்கண்ட பொருட்களை விற்க இருக்கிறேன் என்று கூறி புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்களை மேற்கண்ட செயலிகளில் பதிவிட்டு வருகிறனர்.
அந்த விளம்பரங்களை பார்த்துவிட்டு அவர்களை தொடர்பு கொண்டால் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருளை 90 ஆயிரத்திற்கு தர இருப்பதாகவும், இந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது என்பதால் குறைந்த விலைக்கு விற்க இருப்பதாகவும் கூறி பேரம் பேசுவார்கள்.
அதனை நம்பி பேரம் பேசி அவர்கள் கொடுக்கின்ற வங்கி கணக்குகளில் நாம் அட்வான்ஸ் தொகையாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பணத்தை செலுத்திய உடன் அவர்களுடைய இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.
இப்படி குறைந்த விலைகளில் பொருள் கிடைக்கிறது என்று பொதுமக்கள் நம்பி தங்களது பணத்தை மோசடி நபர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணை வழி குற்றப்பிரிவு காவல்துறை (cybercrime police) பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக வேண்டுகோள் விடுத்துள்ளது.