கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து 150 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. வட மாநிலங்களில் தக்காளி 250 ரூபாயை தொட்டது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது. மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்டினி விநியோகமும் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த வாரத்திலிருந்து ஏறுமுகத்துடனேயே இருந்து வந்தது. சென்னையின் முக்கிய காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு சந்தையில். வெயிலின் தாக்கம் காரணமாக வரத்து குறைவு ஏற்பட்டு, தக்காளி விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில்தக்காளி விலை இன்று ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் 125 என மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 25 ரூபாய் குறைந்து 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளியின் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே போல சின்ன வெங்காயம் 20 ரூபாய் குறைந்து 160 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.