கன்னியாகுமரியில் தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படித்து வரும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின். இவர் களியக்காவிளை அருகேவுள்ள கழுவன்திட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய இரண்டாவது மகள் 19 வயதுடைய பென்சி. பென்சி அதே பகுதியிலுள்ள தனியார் டிப்ளமோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
உறங்கச் செல்வதற்கு முன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவது வழக்கமாக கொண்ட ஜஸ்டின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல குடும்பத்தினருடன் பென்சியும் பேசி முடித்து எல்லோரும் உறங்கச் சென்றுள்ளனர்.
வழக்கமாக காலையில் சீக்கரமே எழுந்துவிடும் பென்சி நீண்ட நேரமாக அவருடைய அறை திறக்காமலேயே இருந்துள்ளது.
இது பென்சியின் தாயாருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து அவர் பென்சியின் அறையை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே தாழிடப்பட்டு இருந்த கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை பென்சியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பதறிப்போன பென்சியின் குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்த போது, பென்சி மின் விசிறியில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்ய நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனத்தில் ரூ30 ஆயிரம் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டி இருந்துள்ளதாகவும், ஆனால் உடனடியாக அவரால் பணம் செலுத்த இயலவில்லை என்றும் இதனால் மனமுடைந்த பென்சி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.