தலைநகர் புதுதில்லியில் 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோதி நாளை திறந்து வைக்கிறார்.
தில்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு நூறாண்டுகள் நெருங்கும் நிலையில், அதன் அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதன் கட்டுமானப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.புதிய நவீன வசதிகள் கொண்ட நான்கடுக்கு மாடிகளை கொண்ட கட்டிடமாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மக்களவை தேசிய பறவையான மயிலின் கருப்பொருளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாநிலங்களவை தேசிய மலரான தாமரையின் கருப்பொருளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் 888 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 272 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியும்.
சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த புதிய கட்டிடம் இரண்டாண்டுகள் ஐந்து மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பழைய வட்ட வடிவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்களின் கட்டிடக் கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் முழுவதும் இந்திய கட்டிடக் கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாளை திறக்கப்படும் போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய செங்கோல் நிறுவப்படவுள்ளது.இந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டதாகும்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்காக இந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் இருந்து புதுதில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த செங்கோலை தமிழகத்தைச் சேர்ந்த ஆதினங்கள் ராஜமேளம் முழங்க நாளை ஏந்தி வருவார்கள்.
அந்த செங்கோல் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டு பிரதமர் நரேந்திர மோதியிடம் ஒப்படைக்கப்படும்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நாளை ஹோமங்கள் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
பிஜேபியின் தோழமை கட்சிகளான அஇஅதிமுக, பாமக, தமாகா, சிவசேனா ஆகிய கட்சிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.எதிர்க்கட்சிகள் அணியிலிருந்து பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், அகாலிதளம் உள்ளிட்ட பல கட்சிகளும் இதில் பங்கேற்கின்றன.
ஆனால் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 20 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.