சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்(mk stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சென்னைக்கு அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்திலிருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
40 நாட்கள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக தரையிறக்கப்பட்டது.
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி படுத்தியுள்ளார். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலவில் இந்தியா..! சந்திராயன்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள்.
சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்.” என்று பதிவிட்டுள்ளார்.