இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி யாருக்கு? – மனம் திறந்த ரோஹித் சர்மா..!

இந்திய அணிக்கு தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி கிடைத்தது என தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது.

அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. அப்போது ரத்தான 5-வது டெஸ்ட் விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rohit sharma
Rohit sharma

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பற்றி ரோஹித் சர்மா கூறியிருப்பதாவது:

என்னுடைய பார்வையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. அந்தத் தொடர் எனக்கும் அணிக்கும் நன்றாக அமைந்தது. ரத்தான கடைசி டெஸ்ட்டை அடுத்த வருடம் விளையாடப் போகிறோமா அல்லது அது தனி டெஸ்ட்டா என எனக்குத் தெரியாது.

ஆனால் டெஸ்ட் தொடரை நாங்கள் வென்றுள்ளதாகவே எண்ணுகிறேன். அதை நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஒரு சதம் உள்பட 368 ரன்கள் எடுத்தேன். அதற்காக அதுதான் என்னுடைய சிறந்த டெஸ்ட் தொடர் எனக் கூறமாட்டேன். என்னுடைய சிறந்த ஆட்டம் இனிமேல் தான் வெளிப்படப் போகிறது.

இங்கிலாந்தில் சவாலை நன்கு எதிர்கொண்டேன். அதற்காக நன்கு பயிற்சி பெற்றேன். இங்கிலாந்தில் விளையாடுவதற்கு ஏற்றாற்போல ஆட்டத்திலும் மனத்தளவிலும் தயாரானேன். இதேபோல வருங்கால டெஸ்ட் தொடர்களிலும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.

Total
0
Shares
Related Posts