சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்கள் உட்பட எண்ணில் அடங்காத சாதனைகளை படைத்துள்ள இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அவரது சொந்த ஊரான மும்பை வான்கடே மைதானத்தில் சிலை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இந்தியா – இலங்கை கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் அங்கு இருந்த சச்சின் சிலையை பார்த்து இது சச்சினா இல்லை ஸ்டீவ் ஸ்மித்தா என குழம்பிப் போனார்கள்.
ஏஎனெனில், சச்சின் டெண்டுல்கரின் சிலை பக்கவாட்டில் இருந்து பார்க்க அப்படியே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் போலவே இருந்தது. அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நேரலையிலும் அந்த சிலை பார்க்க ஸ்டீவ் ஸ்மித் சிலை போல தான் இருந்தது.
இதனால், சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் வான்கடே மைதானத்தில் திறக்கபட்டுள்ள சிலை கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளது. மேலும், “சச்சின் முன்னிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஸ்டீவ் ஸ்மித் சிலையை திறந்து வைத்தார்” என கருதுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை கிரிக்கெட் அமைப்பு சச்சினுக்கு சிலை வைக்க முடிவு செய்து கடந்த ஓராண்டாக அந்த பணிகள் முடிந்து சிலை திறக்கபட்டுள்ள போதும், கடைசியில் அந்த சிலை சச்சின் போலவே இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கு மேல் அந்த சிலையை அகற்றவும் முடியாது என்பதால் ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர். ஆனாலும், இந்த சிலை இளமைக் கால சச்சினை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது என ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அந்த சிலையில் ஏதும் மாற்றம் செய்வது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.