மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மே 5ம் தேதி இரு இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியதில் இதுவரை 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருவதால், அப்பகுதிகளில் போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூர் கலவரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்ட நிலையில், கலவரம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இணைய சேவை செப்டம்பர் 23ம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வன்முறை செயல்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அது மட்டும் இன்றி 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.
இதனை அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ” வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் மூலம் தவறான செய்திகள், வதந்திகள் பரவி வருகின்றன.

இதனை தடுக்கவும், வன்முறைக்கு காரணமாக பிற செய்திகள் பரவுவதைத் தடுத்து சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தற்காத்து கொள்ளவும் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.
குழுக்களைச் சேர்க்கவும், வன்முறை செயல்களில் ஈடுபடவும் அதிக அளவில் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வாய்ப்பு அதிகம்.
இதனால், செப்டம்பர் 26ம் தேதி மாலை 7.45 மணிமுதல் அக்டோபர் 1ம் தேதி மாலை 7.45 மணிவரை செல்போன் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.