காஸா மீது ஏவுகணை உள்ளிட்டவற்றை வீசியும், கடல் மார்க்கமாகவும் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அடுத்த நகர்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது .
அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை உள்ளிட்டவற்றின் கோரிக்கைகளை மீறி, காசா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதலால், மேற்குகரை முழுவதும் தற்போது பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஜிஹாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினர்.
இதில் இஸ்ரேலில் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது . இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரை பகுதிகளில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹமாஸ் போராளிகள் பிடியில் உள்ள காஸா பகுதியை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக முடியும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் காஸா மீது மிகப்பெரிய அளவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது தரை, வான், கடல் என மும்முனைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது .