சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த 2-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஈடுபடும்.
அதற்கு முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை அதன் சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படும்.
அதன்படி, கடந்த 3-ந்தேதி சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 4-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் 2-ம் கட்டமாக சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது.
அதன் பின்னர், கடந்த 10-ம் தேதி 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணியும், 15-ஆம் தேதி 4- வது முறையாக சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பணியும் வெற்றிகரமாக நடந்தது.
இந்த நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் தற்போது அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி,
ஆதித்யா-எல்1 மிஷன்:
“ஆதித்யா-எல்1 அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன.
இந்தத் தரவு விஞ்ஞானிகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவுகிறது.
அலகுகளில் ஒன்றால் சேகரிக்கப்பட்ட ஆற்றல் துகள் சூழலில் உள்ள மாறுபாடுகளை படம் காட்டுகிறது.
அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆதித்யா எல் 1 விண்கலம் அளவிட தொடங்கியுள்ளது” என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.