2024 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார் .
சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய 2 திட்டத்தின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்துள்ள இந்தியா உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பொக்கிஷங்களின் ஒன்றான இஸ்ரோ தற்போது மேலும் பல செயற்கைகோள்களை தயாரித்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
அந்தவகையில் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா-வை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-58 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது :
இந்தாண்டின் 12 மாதங்களில் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணியத்துள்ளோம். உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகள் சரியாக நடந்தால் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாகவும் செயலாற்ற முடியும் என நம்பிக்கை உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.