தமிழகத்தில் இன்று (08.06.24) முதல் ஜூன் (14.06.24) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Centre) தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 8) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (09.06.24) முதல் 14.06.2024 வெள்ளிக்கிழமை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க : பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு ஸ்வீட்.. தமிழக அரசு!
வெப்பநிலையைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து தினங்களுக்கு ஜூன் 08.06.24 முதல் 12.06.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 1° –2° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்று ஜூன் 08.06.24 முதல் 10.06.2024 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (Chennai Meteorological Centre).