புதிய குடும்ப அட்டை (new ration cards) கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து இருப்பதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்த நிலையில், கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மகளிர் உரிமைத் தொகையானது குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்ப பெண்கள் இதற்கு தகுதியானவர்கள் என்றும் குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசின் திட்ட செயலாக்கத் துறை அறிவித்தது. இதற்காக வரும் 20ஆம் தேதியில் இருந்து ரேசன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டை தாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்கள் வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைய நாள்தோறும் புதிய குடும்ப அட்டை (new ration cards) கேட்டு 500 விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த குடும்ப தலைவரின் பெயரை நீக்குதல், கூட்டுகுடும்பமாக இருப்பின் தனித்தனி ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்தல் என பல்வேறு வழிகளில் மக்கள் புதிய ரேசன் அட்டைக்கு மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அவ்வாறு, பெயர் நீக்கம் செய்து தனித்தனி குடும்ப அட்டைகளை பெற்று ரூ.1000 உதவித் தொகையை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை தடுக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் பெறும் பணி முடியும் வரை குடும்ப அட்டை பெயர் நீக்க விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிதாக புதிய குடும்ப அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.