கலாஷேத்ராவை காமஷேத்ராவாக மாற்றிய நடன உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை சென்னை போலீஸார் நேற்று காலை அதிரடியாக கைது செய்திருக்கிறது காவல்துறை. தலைமறைவாக இருந்த ஹரிபத்மனை போலீஸ் தூக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பணிபுரியும் நடன துணைப் பேராசிரியர் ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நான்கு ஆசிரியர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நால்வர் மீது அக்கல்லூரியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். முன்னாள் மாணவர் அளித்த புகாரின் பேரில், மார்ச் 31 வெள்ளிக்கிழமை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹரிபத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, பாலியல் துன்புறுத்தல், குற்றவியல் மிரட்டல், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுவும் கலாஷேத்ரா மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு இரு நாட்கள் கழித்தே மார்ச் 31 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹரிபத்மனுக்கு எதிராக மாணவிகள் போராடிக் கொண்டிருந்தபோதே அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் ஹைதராபாத்தில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக அவரை மார்ச் 30 ஆம் தேதி ஹைதராபாத் அனுப்பி வைத்தது கலாஷேத்ரா நிர்வாகம். அவரோடு அவரோடு பரதநாட்டிய மாணவர்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். மார்ச் 31 ஆம் தேதி ஹரிபத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அவரைத் தொடர்புகொண்ட நிர்வாகத்தினர், எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு கல்லூரி பக்கம் வர வேண்டாம்’ என்று தகவல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே ஹரிபத்மன் மீது புகார் கொடுத்த மாணவியைத் தேடி தமிழக காவல்துறை அதிகாரிகள் குழு கேரளாவுக்கு சென்றது. அங்கு அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது காவல்துறை. இதற்கிடையே கடந்த வெள்ளிக் கிழமையன்று பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்துக்கு மாணவர்களுடன் சென்றார் ஹரிபத்மன். அங்கே நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏப்ரல் 2 ஞாயிறு காலை மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குத் திரும்பினர் என்று போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. உடனடியாக சென்னை போலீஸார் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்புகொண்டனர். ஹைதராபாத் போலீஸார் ரயில்வே நிலையம், விமான நிலையங்களில் விசாரித்து சனியன்று இரவே ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் ஹரிபத்மன் மாணவர்களுடன் சென்னைக்கு புறப்பட்டுவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலைய வட்டாரத்திலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தினர். மேலும் ஹரிபத்மனின் செல்போன் நம்பரை தொடர்ந்து துரத்தி வந்தனர். ஆனால் ஹரிபத்மன் தனது செல்போன் நம்பரை சனிக் கிழமை இரவே ஏரோப்ளேன் மோடில் போட்டுவிட்டார். அதனால் நாட் ரீச்சபிள் என்றே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது. ஹரி பத்மனின் மொபைல் நம்பரை போலீசார் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஏரோப்ளேன் மோடு ஆஃப் ஆகி, ஹரிபத்மன் யாருக்கோ கால் செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.
மாதவரம் பகுதி சிக்னலில்தான் ஹரிபத்மனின் போன் ஆன் ஆகியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். மாதவரத்தில் இருந்து தன் குடும்பத்தினருக்கு போன் செய்த ஹரிபத்மன், ‘நான் சேஃபாக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த போன் அழைப்புதான் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
தொடர் விசாரணையில் மாதவரத்தில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த ஹரிபத்மனை இன்று (ஏப்ரல் 3) அதிகாலை நெருங்கினார்கள் அடையாறு போலீஸார். அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான டீம் ஹரிபத்மனை கைது செய்திருக்கிறது. கைது செய்த 24 மணி நேரத்துக்குள் ஹரிபத்மனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது சட்டம். அதன்படி ஆஜர்படுத்துவோம் என்கிறார்கள் போலீஸார்.
இதற்கிடையே கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி மாநில மகளிர் ஆணையத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். கலாஷேத்ராவில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று மாணவர்கள் தேர்வுக்கு வரவேண்டும் என்றும் நிர்வாகம் அறிவித்தது. ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கைது செய்யும் வரை தேர்வு நடத்தக் கூடாது என மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.