கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து அங்கு நடந்த கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி,பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 2022 ஜூலை 17-ம் தேதி மாணவி மரணம் கொலை என்றும் அதற்க்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாணவிகளின் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அது கலவரமாக மாறியது.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர். இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், சம்பவம் நடந்து 20 மாதங்கள் கடந்தும், மாணவியின் தாய் மற்றும் வன்முறையை தூண்டியவர்கள் யாரையும் விசாரணை செய்யவில்லை. வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிறப்பு புலன் விசாரணைக் குழுவிடம் இருந்து வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வு குழு, சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.