அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த இந்திய குடிமகன் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயகமே நிறைவேற்றினார்.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 ஆண்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரிப் என்பவரது மகன் இம்தியாஸ் ஷெரிப் அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இன்று அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவர் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள புனித சூசையப்பர் ஆரம்பப்பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் அவரது வாக்கினை அளித்தார்.
இதைப் பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, அவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாகவும், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே விமான டிக்கெட் முன்பதிவு செய்து காஞ்சிபுரம் வந்து அடைந்ததாகவும் தெரிவித்தார்.
அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வெகுதூரம் பயணம் செய்து அவர் வந்துள்ளார் அதைப்போலவே அனைத்து பொதுமக்களும் அவர்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என இம்தியாஸ் ஷெரிப் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.