கேரளாவில், ஞானஸ்நான நிகழ்ச்சியின் (Baptism ceremony) போது கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிப்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி ஞானஸ்நான நிகழ்ச்சி (Baptism ceremony) ஒன்று நடைபெற்றது. இநிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டவர்கள் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட புகாரின் பேரில், விழாவில் உணவு சப்ளை செய்த கேட்டரிங் சர்வீஸ் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 268, 296 மற்றும் 272 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.